search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது, சிலந்தி ஆறுகளில் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது- துரைமுருகன்
    X

    தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது, சிலந்தி ஆறுகளில் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது- துரைமுருகன்

    • இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான்.
    • ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை.

    வேலூர்:

    தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும், பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

    அதில் ஒன்றுதான் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால் தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் கன்னியாகுமரிக்கு வந்து தடை உத்தரவு போட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதை தான் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர். அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது. அதைக்கூட பார்த்திருக்க மாட்டாரா?. காந்தி பற்றி தெரியாதா?. அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான். ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் கவர்னர்.

    புதிய அணை கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, டி.பி.ஆர். தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். ஆனால் மேகதாது, சிலந்தி ஆறு, முல்லை பெரியாறில் எந்த காரணத்தைக் கொண்டும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றியும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

    ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள், சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம் தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. ஒடிசாவில் எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்கோடு உள்ளனர். அதேபோன்றுதான் ஒரு தமிழர் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×