search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்- தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு
    X

    ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்- தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

    • தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    இதனால் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக தண்டனை மற்றும் அபராதத்தை கடுமையாக்க மத்திய அரசு 2019-ல் மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தது.

    இதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. அதற்கேற்ப மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு அபராத தொகைகளையும் உயர்த்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு எந்தெந்த வகையில் அபராதம் விதிக்கப்படும் என்பதை விரிவாக பட்டியலிட்டு உள்ளார்.

    மொத்தம் 46 வகையான குற்ற விதிமீறல்களுக்கு அபராத தொகை எவ்வளவு என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அரசாணையாகவும் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-

    மோட்டார் வாகனத்தை ஓட்டும் போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டினாலோ ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    சாலைகளில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000மும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களை ஓட்டுவதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதி இல்லாதவர்கள் வாகனத்தை ஓட்டினால் முதன்முறை ரூ.1000-ம், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விதிகளை மதிக்காமல் அதிக ஒலி எழுப்பினாலோ, அதிக புகையுடன் வாகனங்களை ஓட்டி சென்றாலோ ஏற்கனவே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகை உயர்த்தப்படவில்லை.

    உரிய பதிவெண்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.2500 அபராதமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.போக்குவரத்து வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனுமதி (பெர்மிட்) இன்றி ஓட்டினால் வசூலிக்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையும் அதிகரிக்கப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் இதே தொகையே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் உரிய அனுமதியின்றி போக்குவரத்து விதிகளை மீறி இயக்கினால் முதன்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.

    உரிய இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டி போலீசில் விதி மீறினால் முதல் முறை ஆயிரமும், 2-வது முறை 4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றி சென்றால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். லாரிகளை நிறுத்த மறுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டு உள்ளன.

    லாரிகளில் அதிக உயரத்தில் பாரம் ஏற்றி வந்தாலோ அல்லது அகலமாக பாரம் ஏற்றி வந்தாலோ ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றி சென்று ஒவ்வொரு பயணி வீதம் கணக்கீட்டு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

    மோட்டார் வாகனத்தை புதுப்பிக்க தவறினால் முதல் முறையாக ரூ.500 அபராதமும், இரண்டாவது முறையாக இத்தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

    பிற மாநிலத்தில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களை 12 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்காவிட்டால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து அதே தவறு செய்தால் ரூ.1500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட மோட்டார் வாகனத்தை பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் முதல் முறை ரூ.500-ம், 2-வது முறை இதே தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

    மோட்டார் விதி அடையாள குறிகளை அகற்றினால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து இதே தவறுக்கு ரூ.1,500-ம், மோட்டார் விதிகளை மீறினால் ரூ.1,500, பொது இடத்தில் வாகனங்களை விபத்து ஏற்படும் நிலையில் நிறுத்தி இருந்தால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.

    வாகனத்தில் முன்பகுதி அல்லது ஓடுகிற பகுதியில் நின்று பயணித்தாலோ அல்லது உட்கார்ந்து பயணித்தாலோ முதலில் ரூ.500-ம் அடுத்தடுத்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகன சோதனையின் போது, லைசென்சு, கண்டக்டர் லைசன்சு, பதிவு, பெர்மிட், தகுதி சான்று, இன்சூரன்ஸ் ஆவணங்களை காட்டாவிட்டால் முதலில் ரூ.500-ம், தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.

    டிரைவிங் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு முதல் முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறையாக ரூ.5000 அபராதமும், கண்டக்டர் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகன தயாரிப்பாளர், இறக்குமதியாளர், டீலர், விற்பனையாளர், வாகனத்தை ஆல்டர் செய்வதில் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் போக்குவரத்து புதிய அபராத விபரங்கள் தொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரும் அபராத விபரங்களை வெளியிட்டார். சென்னையில் மூடப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்த தகவல்களை கூகுல் மேப் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக புதிய செயலி ஒன்றை அவர் வெளியிட்டார்.

    Next Story
    ×