search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து
    X

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து

    • தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • தீயை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதையொட்டியுள்ள சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 நோயாளிகள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆபரேசன் தியேட்டர் பகுதியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீரென மின் கசிவு ஏற்பட்டு கரும் புகை கிளம்பியது. உடனடியாக ஊழியர்கள் அந்த இடத்தில் தீயணைப்பான் கருவியை கொண்டு பவுடர் தூவி அணைக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த குளிர்சாதன பெட்டி மூலம் முதல் தளம் மற்றும் 2-ம் தளத்தில் உள்ள அனைத்து குளிர்சாதன பெட்டிகளுக்கும் கரும் புகை பரவியது. இதை பார்த்த டாக்டர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் ஆபரேசன் தியேட்டர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனால் நோயாளிகள் பதறினர். டாக்டர்கள் சுதாரித்துக் கொண்டு நோயாளிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதல் மாடியில் விபத்து மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறும் வரும் நோயாளிகள், ஆபரேசனுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை ஸ்டிரெச்சர் மூலமாக அவசர அவசரமாக ஊழியர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

    முதல் மாடியில் 30 பேர், 2-வது மாடியில் 50 பேர் என மொத்தம் 80 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களை பத்திரமாக ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள வேறு வார்டுக்கு மாற்றினர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள், ஊழியர்கள், டெக்னீஷியன்கள் உள்பட அனைவரும் வெளியே வந்து விட்டனரா? என்பதை உறுதி செய்து விட்டு முதல் தளத்துக்குள் ஒவ்வொரு வீரராக புகுந்து புகையை வெளியேற்றும் மிஷின் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தொடர்ந்து மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர். பின்னர் குளிர்சாதன பெட்டிகளிலும் நுரை தெளிப்பான், ரசாயன பவுடர் ஆகியவற்றை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். மேலும் தீ பரவாமல் இருக்க பெரிய குழாயை கொண்டு தண்ணீரை நாலாபுறம் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த தீயணைப்பு பணி நடைபெற்றது.

    இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நோயாளிகள், வளாகத்தில் திரண்டிருந்த உறவினர்கள், பீதியில் பரபரப்பாக காணப்பட்டனர்.

    தீயை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது ஆஸ்பத்திரி எலெக்ட்ரீசியன்கள் மின்கசிவு ஏற்பட்ட ஏ.சி. மற்றும் பிறகு பகுதிகளில் கருகிய வயர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×