search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள நீரை அகற்றும் பணியில் சென்னை, கோவையை சேர்ந்த 600 மாநகராட்சி ஊழியர்கள்
    X

    வெள்ள நீரை அகற்றும் பணியில் சென்னை, கோவையை சேர்ந்த 600 மாநகராட்சி ஊழியர்கள்

    • மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    • முதல் 2 நாட்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் சூழ்ந்திருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 17-ந் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் ஒருசில இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வெள்ளத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் தூத்துக்குடி வந்து மின் இணைப்பு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் தூத்துக்குடியில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சி ஊழியர்கள் தூத்துக்குடி வந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-


    தூத்துக்குடியில் வெள்ள நீரை அகற்றுவதற்காக சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சியை சேர்ந்த 600 பம்பிங் ஆப்ரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வந்தனர்.

    அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட மீட்பு குழுவினருடன் சேர்ந்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகரில் வடக்கு, மேற்கு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மாநகரில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி சவாலாக இருந்தது. எனினும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்கள், அதிக சக்தி கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது மாநகரில் 80 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சென்னையை சேர்ந்த பம்பிங் ஆப்ரேட்டர்கள் கூறும்போது, முதல் 2 நாட்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் சூழ்ந்திருந்தது. வடிகால் பகுதிகளில் பல இடங்களில் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் தண்ணீரை வெளியேற்றுவது கடினமாக இருந்தது. மேலும் மாநகர் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் தண்ணீரை எங்கிருந்து பம்பிங் மூலம் வெளியேற்றுவது என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனினும் கடின முயற்சிக்கு பின்னர் தண்ணீர் வெளி யேற்றப்பட்டது என்றனர்.

    தூத்துக்குடி மக்கள் கூறும்போது, மாநகரில் பல இடங்களில் தண்ணீர் வடிந்த நிலையிலும் இன்னும் சில இடங்களில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் தான் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், வேலைக்கும் சென்று வருகிறோம். வரும் புத்தாண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.

    Next Story
    ×