search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை
    X

    கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை

    • சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • மலை கிராமங்களிலும் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதன் தாக்கமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலிலும் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது பெய்துவரும் மழை பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று காலை முதலே சாரல்மழை பெய்து வந்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் காணப்பட்ட வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒருசில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. கல்லுக்குழி குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலையில் மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல மலை கிராமங்களிலும் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் ஏரியில் படகு சவாரி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதியிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது.

    கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது பெய்துவரும் மழை காய்கறி பயிர்களுக்கும், மலைத்தோட்ட பயிர்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியிலும் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக சாரல்மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

    Next Story
    ×