search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுகட்டிய வீரர்கள்
    X

    ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுகட்டிய வீரர்கள்

    • வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
    • உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்த படியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவின் போது ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 681 காளைகளும், 480 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

    வாடிவாசல் முன்பு காளைகள் மற்றும் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டி ருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் ஆக்ரோசமாக களத்தில் நின்று விளையாடின. வீரர்களும் அதற்கு நிகராக காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல சுற்றுகளாக மாலை வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைகளுக்கும் டாடா ஏசி வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மின்விசிறி, அண்டா, பீரோ, தங்க காசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

    உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×