search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பக்தர்களின்றி நடந்து முடிந்த கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா
    X

    தமிழக பக்தர்களின்றி நடந்து முடிந்த கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா

    • இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.
    • இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராமேசுவரம்:

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் கடல் பகுதியில் மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இருநாட்டு மீனவர்களும் ஓய்வு எடுப்பது, வலைகளை காய வைப்பது, மீன்களை தரம் பிரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் ஆலய திருவிழாவில் இரு நாட்டில் இருந்தும் ஏராளமான மீனவர்களும், கிறிஸ்தவர்களும் பங்கேற்பார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கின. இருந்தபோதிலும் தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், சிறையில் அடைப்பதுமாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    இதனால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய பக்தர்கள் பங்கேற்பார்களா? என்ற சந்தேகம் நிலவியது. ஏற்கனவே கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்களை தொடங்கினர். படகுகளில் கருப்பு கொடி ஏற்றியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், பேரணி நடத்தியும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் போராடி வருகின்றனர்.

    இதையடுத்து கச்சத்தீவு திருவிழா தொடங்கியதால் அதில் பங்கேற்க போவதில்லை என தமிழக மீனவர்கள் முடிவு செய்தனர். இதனால் இந்தியாவில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவுக்கு படகுகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. பக்தர்கள் யாரையும் படகுகளில் ஏற்றி சென்று கச்சத்தீவு செல்ல தமிழக மீனவர்கள் மறுத்து விட்டனர்.

    அதே நேரத்தில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை தரப்பில் இருந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இலங்கையில் இருந்து மிகவும் குறைவான மீனவர்களே கச்சத்தீவுக்கு வந்தனர். நேற்று கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து திருவிழா தொடங்கியது. ஆனால் ராமேசுவரத்தில் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் படகுகளை இயக்கவில்லை. ஏற்கனவே பங்கேற்கபோவதில்லை என்று அறிவித்திருந்த போதிலும் இதை அறியாமல் ஏராளமான வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி கடலோர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    அதேபோல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் தமிழக மீனவர்கள் யாரும் பங்கேற்காததால் களை இழந்து காணப்பட்டது. மிகவும் குறைவான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று மாலை அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை நெடுந்தீவு பங்கு தந்தை ஏற்றி வைத்தார். ஆலயத்தில் சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

    விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதன் பின்பு கொடியிறக்கப்பட்டது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக இரு நாட்டில் இருந்தும் வியாபாரிகளும் புறக்கணித்தனர். இதனால் திருவிழாவில் வழக்கமாக விற்பனையாகும் பொருட்கள், கடைகள் களை இழந்து காணப்பட்டன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முதன் முறையாக தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளாமல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நடைபெற்றது இந்திய பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

    Next Story
    ×