search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவரைப்பேட்டை ரெயில் விபத்து... 2 நாட்கள் விசாரணை நடத்துகிறார் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்
    X

    கவரைப்பேட்டை ரெயில் விபத்து... 2 நாட்கள் விசாரணை நடத்துகிறார் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்

    • விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.
    • உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3,040 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரெயில் 53½ மணி நேரத்தில் 35 ரெயில் நிலையங்களில் நின்று சென்று தர்பங்காவை அடைகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான இது நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பெரம்பூர் வந்தடைந்த இந்த ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த ரெயிலில் முன்பதிவு ஏ.சி. பெட்டிகள் 10, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பெட்டி 3, 2 சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் 1,300 பயணிகளும், முன்பதிவு இல்லாத 3 பெட்டிகளில் 400 பேரும் என மொத்தம் சுமார் 1,700 பேர் பயணித்தனர்.

    இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது. இதனால், சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

    சரியாக, இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் காலிப்பெட்டிகள் மீது 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

    ரெயில் என்ஜின் மோதியதில், சரக்கு ரெயிலில் கடைசியாக இருந்த கார்டு பெட்டி தூக்கி வீசப்பட்டது. அடுத்ததாக இருந்த சரக்கு பெட்டியும் நிலைகுலைந்தது. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜின் மற்றும் தொடர்ந்து இருந்த ஜெனரேட்டர் மற்றும் லக்கேஜ் பெட்டி, தொடர்ந்து இருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1 (எச்.1), இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2 (ஏ.2, ஏ.1), 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 6 (பி 6, பி 5, பி 4, பி 3, பி 2, பி 1), 3-ம் வகுப்பு எக்கனாமி ஏ.சி. பெட்டி 1 (எம்.1), சமையல் அறை பெட்டி (பேண்டரி) ஆகியவை ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதி இருபுறமும் சரிந்து விழுந்தன.

    ரெயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு ஆகியவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்துகிறார்.

    பாகமதி ரெயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரெயில் நிலைய மேலாகர் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×