search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல்- முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
    X

    முதுமலை யானைகள் முகாமுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வரும் காட்சி.

    பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல்- முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

    • நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஊட்டி:

    பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி சென்னை வர உள்ளார். அன்று நடக்கும் விழாவில் அவர் சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

    அதற்கு அடுத்த நாள் 9-ந்தேதி மீண்டும் தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளதாக மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி 9-ந் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அதன் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரதமர் மோடி முதுமலைக்கு வரும் உறுதியான தகவல்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்து பிரதமர் வரும் விவரங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.

    முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை.

    தற்போது பிரதமர் வருவதாக வெளியான தகவலை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர குட்டி யானைகள் பராமரிக்கப்படும் கரால் பகுதிக்கும் புதியதாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இங்கு எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து செல்வதுடன், மத்திய, மாநில அரசுகளின் வி.ஐ.பி.களும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் வருகை பற்றி இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றனர்.

    Next Story
    ×