search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும்- மாணிக்கம்தாகூர் எம்.பி.
    X

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும்- மாணிக்கம்தாகூர் எம்.பி.

    • பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    விருதுநகர்:

    காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த அரசு கள்ளச்சாராயத்தையும், போதை பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அரசுடன் காங்கிரஸ் கட்சி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மது இல்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும். தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தை வஞ்சிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

    விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து என்றைக்கு இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரியவில்லை.

    பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகின்றது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்துகின்றது என மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அறிவார்ந்த மக்கள் உள்ளதால் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் அது யூடர்ன் எடுக்கின்றது. அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றது. 2024 தேர்தலுக்கு பின்பு அந்த வீரவசனம் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவில் கடந்த ஆட்சியாளர்கள் திருப்பதி உண்டியலில் கை வைத்து விட்டார்கள் என பவன்கல்யாண் புகார் கூறியுள்ளார். பவன்கல்யாண் பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இருக்கின்றார். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூ.2,000 நிதி, படிக்கின்ற குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.6,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதனை மறக்கடிக்க மத அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஆந்திர மக்கள் புரிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

    பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, நாகேந்திரன். நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×