search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானம்- பாதுகாப்புக்கு 4 ஆயிரம் போலீசார் குவிப்பு
    X

    பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானம்- பாதுகாப்புக்கு 4 ஆயிரம் போலீசார் குவிப்பு

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி செல்வதற்காக 3 படகுகள் தயார் நிலையில் உள்ளன.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் மோடியின் இந்த தியானம் அரசியல் களத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    இதற்கான தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரங்களில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளார். 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தபோதும் அவர் தியானம் மேற்கொண்டார். 2014-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் என்ற இடத்தில் தியானம் செய்த பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு இமயமலையில் கேதார்நாத் குகைக்கு சென்று காவி உடையில் தியானம் மேற்கொண்டார். இதன் பின்னர் கேதார்நாத் குகை பிரதமர் மோடி தியானம் செய்த குகை என்கிற பெயருடன் மேலும் பிரபலம் அடைந்தது.

    அந்த வகையில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் முடிவடையும் வேளையில் தியானம் செய்வதற்காக இந்த முறை தமிழகத்தை தேர்வு செய்துள்ளார்.

    தியானம் என்றவுடன் அனைவரது எண்ணத்திலுமே விவேகானந்தரின் சாந்த முகமே தோன்றும். அதிலும் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் செய்வதற்கு அனைவருமே விரும்புவார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி தேர்தல் முடிவடையும் நேரத்தில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதற்காக பிரதமர் மோடி நாளை மாலை டெல்லியில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு நாளை மாலை 4.45 மணி அளவில் கன்னியாகுமரியை வந்தடைகிறார். அங்கு பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்கிறார்கள்.

    பின்னர் சுற்றுலா மாளிகை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து படகு இல்லத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடி தனி படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை சென்றடைகிறார். நாளை மாலை 6 மணி அளவில் அங்கு சென்று விடும் பிரதமர் தொடர்ந்து 3 நாட்கள் அங்கேயே தங்குகிறார். வருகிற 1-ந்தேதி மாலை 3.30 மணிக்கே விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து அவர் வெளியே வருகிறார். இதன் மூலம் பிரதமர் மோடி 2 நாள் இரவை விவேகானந்தர் மண்டபத்திலேயே கழிக்கிறார்.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி செல்வதற்காக 3 படகுகள் தயார் நிலையில் உள்ளன.


    இதில் பிரதமர் மோடியுடன் அவரது அருகில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ள சில அதிகாரிகள் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தை சென்றடைந்ததும் நாளை மாலை 6 மணிக்கே பிரதமர் மோடி தியானத்தை தொடங்கி விடுகிறார்.

    இதன்பிறகு 1-ந் தேதி மாலை 3 மணி வரையிலும் அவர் தியானம் மேற்கொள்கிறார். இதன் மூலம் தொடர்ந்து 45 மணி நேரம் பிரதமர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் 1892-ம் ஆண்டு தொடர்ச்சியாக 3 நாட்கள் தியானம் செய்தார். அதன்பிறகே அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புகழ் பரப்பும் வகையிலான ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அதனை நினைவூட்டும் விதத்திலேயே பிரதமர் மோடியும் 3 நாட்கள் தொடர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் மோடியின் இந்த தியானம் அரசியல் களத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடர் தியானத்தின் போது இளநீர் உள்பட நீர் ஆகாரங்களையே பிரதமர் மோடி பருக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் குளிர்சாதன வசதி கிடையாது. மின் விசிறிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். பிரதமர் மோடி தியானம் செய்வதையொட்டி தியான அரங்கில் புதிதாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. 2 டன் ஏ.சி. கொண்டு வரப்பட்டு பொறுத்தப்பட்டது.

    இதேபோன்று பிரதமர் தங்குவதற்காக அங்குள்ள அறை ஒன்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர விவேகானந்தர் மண்டபத்தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறை ஊழியர்களும் தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.



    பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

    டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் கன்னியாகுமரியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். கடலோர காவல் படையினரும், கப்பல் படையினரும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ராணுவ கப்பலில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நாளை முதல் 3 நாட்கள் தடை விதிக்கப்பட உள்ளது. இன்று வழக்கம் போல படகு போக்குவரத்து நடைபெற்றது. இருப்பினும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.

    நாளை மாலையில் இருந்து 1-ந்தேதி மாலை 3.30 மணி வரை விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகள் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினரின் முழு காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. லாட்ஜுகள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக் கொண்டு ஜூன் 1-ந்தேதி ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

    Next Story
    ×