என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/12/24/1811446-erode.webp)
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- பாசனத்திற்காக திறக்கப்பட்ட 1,300 கன அடி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது.
- பொதுப்பணி துறையினர் தொடர்ந்து முகாமிட்டு இரவு, பகலாக சீரமிப்பு பணிகளை வேகமாக முடித்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி கால்வாயின் 59-வது மைல் பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட 1,300 கன அடி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது.
இதனால் தண்ணீர் புகுந்து 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கின. உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பவ பகுதியை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்படி உடைந்த கட்டு மானங்களை அகற்றிவிட்டு புதிய கட்டுமானம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு, பகலாக ஈடுபட்டனர்.
கால்வாயின் வலது புறத்தில் இருந்து மழை நீர் இடது புறம் செல்வதற்காக கால்வாயி்ன் அடியில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுரங்க பாலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே இந்த உடைப்பு ஏற்பட்டது.
அந்த கட்டுமானங்களை முழுமையாக இடித்து அகற்றி விட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கரையின் இருபுறமும் 50 மீட்டர் நீளத்திற்கு சுவர் எழுப்பப்பட்டது. குழாய் பதித்து கான்கிரீட் அமைக்கப்பட்டது.
பொதுப்பணி துறையினர் தொடர்ந்து முகாமிட்டு இரவு, பகலாக சீரமிப்பு பணிகளை வேகமாக முடித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.