search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு
    X

    தமிழகம் முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு

    • காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நெல் கொண்டுவரப்படுகிறது.

    இது தவிர அந்த ஆலைகள் கர்நாடகாவிலிருந்து நெல்லைப் பெறுகின்றன. பல்வேறு இடங்களில் அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உள்ளனர். தற்போது டெல்டா பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து குறைந்துள்ள காரணத்தால் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் கர்நாடக பொன்னி என்று பிரபலமாக அழைக்கடும் 1 கிலோ ஆர்.என். ஆர். அரிசி ரூ. 46-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது சில்லறை சந்தைகளில் ஒரு கிலோவுக்கு ரூ. 55 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், மணச்சநல்லூர் பொன்னியின் விலையும் (ஒரு வருட ரகம்) கிலோ ₹65 ஆக உள்ளது.

    மொத்த சந்தையில் பொதுவான அரிசி வகைகளின் விலை (அளவில் பெரியது) கிலோ 46-ல் இருந்து 51 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சாகுபடி மையங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் பெரும்பாலும் 2-வது போகம் நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி முதல் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வரையிலான பெரும்பாலான விவசாயிகள் சம்பா பருவ சாகு படியை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் வரத்து மேலும் சரியும் என கூறப்படுகிறது.

    இது பற்றி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, எங்களால் எங்கள் ஆலைகளை அதன் திறனுக்கு ஏற்ப இயக்க முடியவில்லை. நெல் பற்றாக்குறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. இது அரிதான நிகழ்வு.

    வரும் ஆண்டில் அடுத்த சம்பா பருவம் வரை பொன்னி போன்ற பிரபலமான ரகங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் சப்ளையை இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் வணிகர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்றார்.

    இதனால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×