search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் 173 ஏக்கர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் 173 ஏக்கர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 141 கிராமங்களில் ரூ.7.09 கோடியில் தரிசு நிலத்தொகுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி, வேளாண் இணையதளங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட் டத்தில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் வகையில் தரிசு நிலங்களை கணக்கெடுத்து அதனை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப் பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணை வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 141 கிராங்களில் 173.6 ஏக்கர் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.7.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால் வாய்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்புடன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகள் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    கடம்பத்துார் ஒன்றியத்தில் திருமேணிக்குப்பம் ஊராட்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 11.72 ஏக்கர் தரிசு நிலம் கணக்கெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த பணிகளை தமிழக அரசின் திட்ட கண்காணிப்பு அலுவலரும், நுகர்பொருள் வாணிபக்கழக ஆணையருமான வி.ராஜாராம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    இதைத்தொடர்ந்து தரிசு நிலத்தொகுப்பு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை பார்வையிட்டார்.

    இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் கடந்த 2022-23ம் ஆண்டு முதல் கட்டமாக தேர்வாகி உள்ள, 1,997 கிராமப் பஞ்சாயத்துகளிலும் இப்பணிகளை மேற்கொள்ள மாநில நிதியில் இருந்து ரூ.227.06 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.

    2023-24-ம் நிதியாண்டில், 3,204 கிராம பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 141 கிராமங்களில் ரூ.7.09 கோடியில் தரிசு நிலத்தொகுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி, வேளாண் இணையதளங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ரிஷப் பண்ட், வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், வேளாண்மை நேர்முக உதவியாளர் வி.எபினேசர், தோட்டக் கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரிஅனி, வேளாண்மை வணிக துணை இயக்குனர் ராஜேஸ் வரி, கடம்பத்துார் வேளாண்மை அலுவலர் எஸ். தீபிகா, கடம்பத்துார் தோட்டக்கலை உதவி இயக்குனர் கே.பூர்ணிமா ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×