என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவை மாவட்டத்தை கலக்கும் பெண் போலீஸ் அதிகாரிகள்
- கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.
- கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர்.
கோவை:
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைபட்டு கிடந்தனர். அவர்களும் படித்து நல்ல நிலையை அடைய பலர் போராடினர். போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் பலரும் படித்து பற்பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிக பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள்.தாங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரமான கோவையில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், குற்றம் செய்தவர்களை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக எந்தவொரு குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.
தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரீமா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றி வரும் பிருந்தா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களாகவும் பெண்கள் அதிகளவில் அந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.
அவர்கள் அந்த பதவியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடிக்கடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடமும் குற்ற சம்பவங்கள் குறித்தும், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாகவே ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது.
கோவை மேற்குமண்டலம் என்பது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஐ.ஜி.யாக இருந்து எந்தவிதமான குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இவரது கடமையாகும்.
இந்த உயர்ந்த பதவியில் தான் தற்போது பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அளிப்பதே தனது முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கு மண்டலத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.ஜி., டி.எஸ்.பி. பதவிகளை தவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பிலும், நிறைய பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படி உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளிலும் கோவை மாவட்ட போலீசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும் அதிகமாக வரவேற்பினை பெற்றுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தாமும் இதுபோன்று சாதித்து உயர் பதவியை அடைய ஒரு உந்துதலாகவும் இருக்கும்.
இதுதொடர்பாக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- கோவையில் போலீஸ் உயர் பதவிகளை பெண்கள் அலங்கரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வரவேற்கத்தக்கது.
பெண் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள், பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புகிறோம்.யாருக்கும், யாரும் சளைத்தவர்கள் அல்ல.
எல்லோரும் ஒன்று என்ற வழியில் பெண்களாலும் எல்லா துறையிலும் திறம்பட பணியாற்ற முடியும் என்பதையே இது காட்டுகிறது. எனவே அனைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சாதித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்