search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி கோவிலில் உண்டியலில் செலுத்திய நகையை திருப்பி கேட்ட பெண்- புதிய நகை வழங்கிய அறங்காவலர் குழுதலைவர்
    X

    காணிக்கை செலுத்திய நகைக்கு பதிலாக வேறு நகையை பெண்ணிடம் ஒப்படைத்தபோது எடுத்த படம். 

    பழனி கோவிலில் உண்டியலில் செலுத்திய நகையை திருப்பி கேட்ட பெண்- புதிய நகை வழங்கிய அறங்காவலர் குழுதலைவர்

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×