search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தம்பதியிடம் நகை அபகரிப்பு- திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
    X

    கைதான இன்ஸ்பெக்டர் கீதா

    தம்பதியிடம் நகை அபகரிப்பு- திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

    • ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார்.
    • நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ். இவரது மனைவி அபிநயா. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

    அப்போது, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதற்கிடையே, திருமணத்தின்போது தனது பெற்றோர் சார்பாக வழங்கப்பட்ட நகைகளை ராஜேசிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜேஷ் தன்னிடம் இருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் கீதா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, அனைத்து நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதா தனது சொந்த தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து, நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா கால அவகாசம் கேட்டிருந்தார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டு, மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    பின்னர், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தற்போது வரை நகையை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×