என் மலர்
தமிழ்நாடு
மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்- திருமாவளவன்
- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் எந்த விரிசலும் இல்லை.
- மத்திய அரசு ஏன் ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றக்கூடாது இதுதான் எங்கள் கேள்வி.
மது ஒழிப்பு சம்பந்தமான கோரிக்கை கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்தனர்.
சந்திப்பு முடிந்ததும் திருமாவளவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு திரும்பிய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரை சந்தித்து எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்தோம்.
அமெரிக்காவில் இருந்த 2 வார காலமும், ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை நல்கினர்.
பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. முதலமைச்சரின் இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ஏராளமான அன்னிய முதலீட்டுக்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நாங்கள் வரவேற்று அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்.
கேள்வி:- ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசினீர்களே? என்ன காரணம் என்று முதலமைச்சர் கேட்டாரா?
பதில்:- அதுபற்றி எதுவும் பேசவில்லை. அது எங்களுடைய கருத்து. அவ்வளவுதான். நாங்கள் 1999-ல் இருந்து பேசி வருகிற ஒரு கருத்து. அது இப்போதைக்கு சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகிறது.
அந்த கோரிக்கையை நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். எந்த நேரத்திலே, எப்போது, எந்த கருத்தை எந்தக் கொள்கையை, எந்த நிலைப்பாட்டை வலுவாக பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவோம்.
கேள்வி:- 2026 தேர்தலில் இந்த கோரிக்கையை வைப்பீர்களா?
பதில்:- தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் நடத்துவது தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் கண்ணீர் சிந்த வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையைத் தான் நாங்கள் முன் நிறுத்தி இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
எனவே இதை திசை திருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்து பார்க்க வேண்டாம். இணைத்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு நேரடியாக நேரில் சென்று அழைப்பு விடுப்பீர்களா?
பதில்:- நாங்கள் தி.மு.க.வுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. பேசப்பட்ட விவரங்களில் இருந்து உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். உங்கள் மாநாட்டில் எங்கள் தரப்பில் இருந்து 2 பேர் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த கருத்தில் உடன்படுகிறவர்கள், எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் எந்த விரிசலும் இல்லை. எந்த நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம். அவ்வளவுதான்.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் இருக்கிறது. இந்த நிலையில் எங்கள் மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாக கூறி இருக்கிறார்கள். இதற்கு பிறகு அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியாது.
இது எல்லோருக்குமான பிரச்சனை. ஒரு கட்சிக்கான பிரச்சனை இல்லை. ஒரு கூட்டணிக்கான பிரச்சனை இல்லை. இது மக்கள் பிரச்சனை.
யாரெல்லாம் மது விலக்கில் உறுதியாக இருக்கிறார்களோ அவ்வளவு பேரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது பொதுவான அறை கூவல்.
நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். இதை தேர்தலோடு முடிச்சி போட வேண்டாம். எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம். எல்லோரும் சேர்ந்து பேசுவோம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
இந்திய ஒன்றிய அரசு எனக்கு இதிலே எந்த பொறுப்பும் இல்லை என்பது போல் வேண்டும் காணாமலும் இருக்கிறது. இந்தியா முழுவதும் போதை பொருள் பழக்கம் தீவிரமாக இருக்கிறது.
இந்தியா முழுவதும் 4 மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் மதுபான வியாபாரத்தை அரசே முன் நின்று நடத்துகிறது. இதற்கு மத்திய அரசுக்கு பொறுப்பு இருக்கிறதா? இல்லையா? இதுதான் விடுதலை சிறுத்தைகள் எழுப்புகிற கேள்வி.
இதற்காக மத்திய அரசு ஏன் ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றக்கூடாது இதுதான் எங்கள் கேள்வி.
இவ்வாறு அவர் கூறினார்.