என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேரளா சென்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்காகக் கேரளா சென்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






