search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யோகா கற்க வந்த இடத்தில் மலர்ந்த காதல்- வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழக வாலிபர்
    X

    யோகா கற்க வந்த இடத்தில் மலர்ந்த காதல்- வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழக வாலிபர்

    • பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் தமிழ் முறைப்படி நடந்தது.
    • அல்பினாலின் தந்தை இறந்து விட்டதால் தாயார், எங்கள் திருமணத்துக்கு சற்று யோசித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 33). டிப்ளமோ யோகா படிப்பு படித்துள்ள பிரபாகரன் கடந்த 10 ஆண்டுகளாக கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரபாகரனிடம் யோகா கற்பதற்காக அந்த நாட்டை சேர்ந்த என்ஜினீயரான அல்பினால்(31) என்பவர் வந்துள்ளார். யோகா கற்க வந்த இடத்தில் அல்பினாலுக்கும், பிரபாகரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    தங்கள் காதல் விவகாரத்தை மணமகள் வீட்டாரிடமும், தனது பெற்றோரிடமும் எடுத்துக்கூறிய பிரபாகரன், அல்பினாலை திருமணம் செய்து கொள்வதற்கு இருவரின் பெற்றோரிடமும் சம்மதம் கேட்டார். அதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் நேற்று தமிழ் முறைப்படி நடந்தது. தமிழில் வேதமந்திரங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர்.

    இது குறித்து பிரபாகரன் கூறுகையில், நான் யோகா ஆசிரியராக கஜகஸ்தானில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய மாணவியாக அல்பினால் யோகா கற்க வந்தார். அவருக்கும் எனக்கும் 2 வயது தான் வித்தியாசம். அவர் என்ஜினீயராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது யோகா கற்க வந்தார். இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    அல்பினாலின் தந்தை இறந்து விட்டதால் தாயார், எங்கள் திருமணத்துக்கு சற்று யோசித்தார். பின்னர் அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து எனது சொந்த ஊரில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது என்றார்.

    அல்பினால் கூறும்போது, எங்கள் நாட்டு கலாசாரத்தை விட தமிழ் கலாசாரமும், இங்குள்ள மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன் என்றார்.

    Next Story
    ×