என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை- ஐந்தருவியில் மட்டும் அனுமதி
- கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை பகுதியில் சுமார் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதன்பின்னர் ஒரு வாரத்திற்கு சற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்திலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அணைகள், குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து பிசான பருவ சாகுபடிக்காக பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 22 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாநகர பகுதியிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அவ்வப்போது பலத்த மழையும், சில இடங்களில் சாரலும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்திருந்தாலும், இன்னும் ஒரு மாதம் வரை பருவகாலம் இருப்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணை பகுதியில் சுமார் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 82 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் 123 கனஅடி நீரில் சுமார் 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் பெய்து வருகிறது. தென்காசியில் 13 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று இரவில் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து இருப்பதால் 2 அருவிகளிலும் குளிக்க தடை நீடிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கயத்தாறு, மணியாச்சி, கோவில்பட்டி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஓட்டப்பிடாரம், குலசேகரப்பட்டினம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விளாத்திகுளம், திருச்செந்தூரில் லேசான சாரல் பெய்தது.






