search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரி சுற்றுலா தலங்களில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகள்- 3 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு அனுமதி
    X

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம். 

    நீலகிரி சுற்றுலா தலங்களில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகள்- 3 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு அனுமதி

    • தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எப்போதுமே இதமான காலநிலை காணப்படும்.

    இந்த கால நிலையை அனுபவிக்கவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த மே மாதம் நடந்த கோடை கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டும். அப்போது சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருக்கும். தற்போது பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் சுற்றுலாபயணிகள் வருகையானது தொடர்கிறது.

    தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்து குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்ததுடன், அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்டத்தின் நுழைவு வாயிலான கூடலூர், குஞ்சபனை, பர்லியார் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது கூடலூர் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.

    நீலகிரியில் கோடை சீசன் காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    தற்போது கோடைசீசன் முடிவடைந்தையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சீசன் முடிந்த பின்னரும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாலைகளில் உலா வருகின்றனர்.

    சிலர் வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அத்துமீறுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    Next Story
    ×