search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் பேட்டி
    X

    போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

    • ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பஸ்சில் சிறிது தூரம் பயணம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இயக்கப்படுகின்ற பழைய பஸ்களை மாற்றி 7700 புதிய பஸ்கள் வாங்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு 23 புதிய பஸ்கள் இன்று துவக்கி வைத்துள்ளோம்.

    இந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், கலைஞர் ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14 ஆயிரம் பஸ்கள் தான் வாங்கப்பட்டது. பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பதே கிடையாது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தார். ஓரிரு மாநிலங்களில் மட்டும் தான் தற்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள பஸ் கட்டணத்தை விட அருகில் உள்ள மாநிலங்களில் அதிகமாக வசூலித்து வருகின்றனர். டீசல் விலை ஏறும் போதெல்லாம் கட்டண தொகையை உயர்த்தி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் கட்டண உயர்வு என்பது இல்லை, மகளிர் விடியல் பயணத்தின் காரணமாக போக்குவரத்து துறையின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதற்கு செலவாகும் தொகை 2800 கோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

    இதனால் தான் போக்குவரத்து பணியாளர்களுக்கு மாதத்தின் முதல்நாள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது. மத்திய இணை மந்திரி எல். முருகன், வட மாநிலங்களுக்கு எல்லாம் சென்றதில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருப்பதால் தான் அவர் நிம்மதியாக தேர்தலில் நிற்கவும் பாதுகாப்பாக இருக்கவும் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×