search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
    X

    தூத்துக்குடியில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் மீனவர்கள்.

    நெல்லை, தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி

    • இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • உவரியில் ஜெபம் முடிந்து ஊர்வலமாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர்.

    தூத்துக்குடி:

    கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது.

    அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை அழித்து சென்றது. இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.

    நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவத்தை நினைவு கூரும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சங்கு குழி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதில் செயலாளர் முருகையா, துணைத்தலைவர் மாரிலிங்கம், பொருளாளர் விமலேசன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    உவரியில் ஜெபம் முடிந்து ஊர்வலமாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    Next Story
    ×