search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை லாட்ஜில் சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி
    X

    மதுரை லாட்ஜில் சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி

    • ஐஸ்வர்ய லட்சுமி நெல்லை அரசு சட்டக்கல்லூரியிலும், அபிநந்தினி திருச்சி அரசு சட்டக்கல்லூரியிலும் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
    • மாணவிகள் இருவரும் இணை பிரியாத தோழிகளாக இருந்துள்ளனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் அபிநந்தினி (வயது 22). திண்டுக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்வரின் மகள் ஐஸ்வர்ய லட்சுமி (22).

    ஐஸ்வர்ய லட்சுமி நெல்லை அரசு சட்டக்கல்லூரியிலும், அபிநந்தினி திருச்சி அரசு சட்டக்கல்லூரியிலும் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதில் பழக்கம் ஏற்பட்டு தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவிகள் இருவரும் மதுரைக்கு சுற்றி பார்க்க வந்துள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் எதிரே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் அறையிலிருந்து வெளியே வரவில்லை.

    இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை தட்டி பார்த்தனர். அதன் பிறகும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்தனர். அப்போது மாணவிகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

    கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. ஆகவே அதுகுறித்து அண்ணாநகர் போலீஸ் நிலையம் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மாணவிகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி இருந்த 2 மாணவிகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவிகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட னர். தொடர்ந்து மயக்க நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 மாணவிகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது தெரியவில்லை.

    மயக்க நிலையில் இருப்பதால் அவர்களிடம் எந்த விபரமும் போலீசாரால் கேட்க முடியவில்லை. மயக்கம் தெளிந்து போலீசார் விசாரணை நடத்திய பிறகே மாணவிகள் விஷம் குடித்ததற்காக காரணம் தெரிய வரும். இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள் பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவிகள் இருவரும் இணை பிரியாத தோழிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் வெவ்வேறு ஊர்களில் சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது. வெவ்வேறு ஊர்களில் படித்து வந்தாலும் அடிக்கடி சந்தித்துள்ளனர்.

    இந்நிலையில் மதுரைக்கு வந்தவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர் லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×