என் மலர்
தமிழ்நாடு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 56 பேர் வேட்புமனு தாக்கல்
- வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
- மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதன் மூலம் மொத்தம் விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, சுயேச்சை வேட்பாளர்கள் காந்தியவாதி ரமேஷ், அக்னி ஆழ்வார், நூர்முகமது, ராஜேந்திரன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, விதவைக்கோலத்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். வேடத்தில் நூர்முகமது உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.