search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம், நாமக்கல்லில் பரவலாக மழை: பலத்த சூறை காற்றில் அரசு பஸ் மீது வேப்பம் மரம் முறிந்து விழுந்தது
    X

    சேலம், நாமக்கல்லில் பரவலாக மழை: பலத்த சூறை காற்றில் அரசு பஸ் மீது வேப்பம் மரம் முறிந்து விழுந்தது

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது.

    Next Story
    ×