search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காடு 46-வது கோடை விழா இன்று தொடங்குகிறது
    X

    ஏற்காடு 46-வது கோடை விழா இன்று தொடங்குகிறது

    • 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.

    *** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.

    Next Story
    ×