search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம்- பெங்களூரில் நடந்த கொள்ளையில் தொடர்பு
    X

    துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம்- பெங்களூரில் நடந்த கொள்ளையில் தொடர்பு

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
    • திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போருர்:

    திருப்போரூர் குளக்கரை அருகே பேக்கரி கடை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் டி.குன்னத்துரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பெங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் பேக்கரிக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊழியர் விக்னேஷ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    விக்னேஷ் கைது செய்யப்பட்டது எதற்கு என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேசை பெங்களூர் போலீசார் காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அப்போது திடீரென விக்னேஷ் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் அவரை போலீசாரால் விரட்டி பிடிக்க முடியவில்லை. இதனால் கையில் சிக்கிய விக்னேசை தவற விட்டுவிட்டோமே என்ற ஏமாற்றத்துடன் பெங்களூர் போலீசார் திரும்பி சென்றனர்.

    துப்பாக்கியுடன் சுற்றிய விக்னேஷ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது 'கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் நகைகளை திருப்போரூரில் பேக்கரி கடையில் வேலைபார்த்து வரும் விக்னேசிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    இதன் அடிப்படையில் தான் பெங்களூர் போலீசார் விக்னேசை துப்பாக்கி உடன் பிடித்து இருந்தனர். ஆனால் அவர் பின்னர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×