search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கோர்ட்டு அருகே பட்டப்பகலில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கு- 2 பேரை சுட்டு பிடித்தது போலீஸ்
    X

    போலீசார் சுட்டதில் காயம் அடைந்த எஸ்.கவுதம், ஜோஸ்வா.

    கோவை கோர்ட்டு அருகே பட்டப்பகலில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கு- 2 பேரை சுட்டு பிடித்தது போலீஸ்

    • துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் சுருண்டு விழுந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22), ரவுடி. இவர் மீது சரவணம்பட்டி, துடியலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் கோவை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் கோர்ட்டு பின்புறம் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று கோகுலை சுற்றி வளைத்து கண்இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் மனோஜ் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், அவரையும் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பட்டப்பகலில் அட்டூழியம் செய்த அந்த கும்பல் எவ்வித பதற்றமும் இன்றி சாவகாசமாக அங்கிருந்து நடந்து சென்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த கொலையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு ரவுடி கொலையில் ஈடுபட்ட கும்பல் நீலகிரி மாவட்டம் ஊட்டி அல்லது குன்னூரில் பதுங்கி இருக்கலாம் என்று ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே தனிப்படையினர் குன்னூர் விரைந்தனர். இது பற்றி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் கொலை கும்பல் ஊட்டிக்கு தப்பி சென்று பதுங்கியது. அதன்பிறகு ஊட்டியில் இருந்து கோத்தகிரிக்கு அந்த கும்பல் 4 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை அறிந்த போலீசார் வாகன தணிக்கை நடத்தினர்.

    கோத்தகிரி-குன்னூர் சாலையில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேருக்கும் கோவை ரவுடி கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கோத்தகிரி-குன்னூர் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவருக்கும் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கோத்தகிரி மார்க்கெட் திடலில் போலீசாரை கண்டதும் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை துரத்தி சென்று போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் 7 பேரும் கோவை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    விசாரணையில் அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), டேனியல் (27) ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்த ஹரி என்ற கவுதம் (24), பீளமேட்டை சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த அருண்சங்கர் (21), ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பது தெரியவந்தது.

    அதன்பிறகு அவர்கள் 7 பேரையும் போலீசார் 2 கார்களில் ஏற்றி கோவைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர். அந்த கார்கள், கோவை-மேட்டுப்பாளையம் ரோடு வனக்கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது காரில் இருந்த ஜோஸ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். அதை நம்பிய போலீசார் காரை நிறுத்தி அவர்கள் 2 பேரையும் கீழே இறங்க அனுமதித்தனர். அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசாரும் அவர்கள் 2 பேரையும் துரத்தி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.கவுதம், ஜோஸ்வா அங்குள்ள ஒரு புதரில் கிடந்த அரிவாளை எடுத்து போலீசாரை மிரட்டினர். ஆனாலும் போலீசார் அவர்களை துணிச்சலாக பிடிக்க முயன்றனர்.

    இதில் போலீஸ்காரர் யூசுப், அவர்களை நெருங்கி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் அவரது வலது கையில் வெட்டினர்.

    மேலும் அவர்கள் தொடர்ந்து தாக்க முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டார். இதில் ஜோஸ்வாவின் வலது முழங்கால் பகுதியில் 2 துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தன. எஸ்.கவுதமின் இடது காலில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

    துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் சுருண்டு விழுந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேர் மற்றும் காயம் அடைந்த போலீஸ்காரர் யூசுப் ஆகிய 3 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக கொலை கும்பல் பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை கோர்ட்டு அருகே ரவுடியை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×