search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பத்தூரில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை 3 உயர்மட்ட மேம்பாலத்துடன் 6 வழிப்பாதையாக மாறுகிறது
    X

    அம்பத்தூரில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை 3 உயர்மட்ட மேம்பாலத்துடன் 6 வழிப்பாதையாக மாறுகிறது

    • சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
    • 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி சி.டி.எச்.சாலை (சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை) மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையான இந்த சாலையில் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை சாலை மிக குறுகலாக இருப்பதால் இதனை 200 அடி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.டி.எச்.சாலை 200 அடி அகலத்தில் விரிவுபடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நில எடுப்பு பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சி.டி.எச். சாலை கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடி சாலையாக குறைக்கப்பட்டு 6 வழிச்சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இறுதியாக இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கொரட்டூர் சந்திப்பில் இருந்து மண்ணூர்பேட்டை வரை ஒரு உயர் மட்ட மேம்பாலமும் , அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் மட்ட மேம்பாலமும் வர உள்ளது.

    விரைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 100 அடி அகலத்தில் 6 வழிச்சாலையாக 3 உயர் மட்ட மேம்பாலங்களுடன் மாற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்த பணிகள் முடிவடையும் போது தொழிற்பேட்டை நிறைந்த இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றியும், விபத்துக்கள் ஏற்படாத வகையிலும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×