என் மலர்
தமிழ்நாடு
தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 40 காட்டு யானைகள் கூட்டம்
- வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தாளவாடி, திம்பம் மலைப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அருள்வாடி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு வந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் 40 யானைகள் ஊருக்குள் வந்து விடும் என அச்சத்தில் இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்பொழுது யானைகள் இடம்பெறும் காலம் என்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வருகின்றது. அதே
போன்றுதான் கர்நாடக மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம். வனப்பகுதி ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளதால் மலை கிராம மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரம் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். சாலையோரம் முப்புதர்களில் யானைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.