என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் எதிரொலித்த டாஸ்மாக் ஊழல் விவகாரம்: அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்
- எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனிடையே, டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது, அதனால் அது பற்றி சபையில் பேச முடியாது. நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதை பற்றி சபையில் பேச விதிப்படி அனுமதியில்லை என்றார்.
நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே டாஸ்மாக் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, நான் எது குறித்து பேசினாலும் அவை குறிப்பில் இருந்து நீக்கினால் நான் என்ன பேசுவது? என்று கூறினார். இதனை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டசபையில் அதிக சப்தம் எழுப்பிய தருமபுரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் பெயரை சொல்லி சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனிடையே, சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டையில் 'யார் அந்த தியாகி' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.






