என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு விரைவில் ரத்த பரிசோதனை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு விரைவில் ரத்த பரிசோதனை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9037656-annauniversity.webp)
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு விரைவில் ரத்த பரிசோதனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
- ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஞானசேகரன் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் போனில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த மாணவி அந்த சாருடனுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து ஞானசேகரனிடமிருந்து அவரது செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஞானசேகரன் போனில் பேசியது தொடர்பாக குரல் பரிசோதனை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தனர். இது பற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ள போலீசார் விரைவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று ரத்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்டமாக இந்த ரத்த பரிசோதனை நடத்தப்படுகிறது. குரல் பரிசோதனை போன்று இந்த ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியமான பரிசோதனையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.
இதை தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ள போலீசார் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஞானசேகரனுக்கு கடும் தண்டனையை வாங்கி கொடுக்க திட்டமிட்டு உள்ளனர்.