search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி அகற்ற முயற்சி: நெல்லையில் கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலைமறியல்
    X

    கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி அகற்ற முயற்சி: நெல்லையில் கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலைமறியல்

    • நாங்கள் மாநகராட்சிக்கு அனைத்து வகையான வரிகளையும் கட்டி வருகிறோம்.
    • கடந்த 1 மாதத்திற்கு முன்பு வந்து இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று நோட்டீஸ் ஓட்டினார்கள்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் முக்கு பகுதியில் இருந்து கோடீஸ்வரன் நகருக்கு செல்லும் காட்சி மண்டபம் வழியாக செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த சாலையில் டவுன் திருஞானசம்பந்தர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

    இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றப்போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் காட்சி மண்டபம் செல்லும் சாலையில் குறுக்காக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மக்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அந்த பகுதியில் இருந்த சங்கரன் என்பவரது கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது.

    இதையடுத்து அந்த இடத்திற்கு உரிமை கோர தொடங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள், இடிந்த வீடு உள்பட சுமார் 75 சென்ட் இடம் அறநிலைய துறைக்கு தான் சொந்தம் என வாதிட்டனர். ஐகோர்ட்டும் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

    நாங்கள் மாநகராட்சிக்கு அனைத்து வகையான வரிகளையும் கட்டி வருகிறோம். இப்போது கடந்த 1 மாதத்திற்கு முன்பு வந்து இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்றும், அவற்றை காலி செய்து விடுங்கள், இடிக்கப்போகிறோம் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் எங்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து நாங்கள் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் சென்று மனு கொடுத்தபோது, இதுகுறித்து நான் எதுவும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என கூறிவிட்டார்.

    இந்த இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வீடுகளை இடிப்பதில் குறியாக உள்ளனர். இந்த பகுதியில் 33 வீடுகள் உள்ள நிலையில் அவற்றை இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×