search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை- விழா ஏற்பாட்டு குழுவினர் விளக்கம்
    X

    சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை- விழா ஏற்பாட்டு குழுவினர் விளக்கம்

    • சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது

    இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சென்னை உணவு திருவிழாவில் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவினராக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளனர்.

    Next Story
    ×