என் மலர்
தமிழ்நாடு
மாட்டின் சிறுநீரை 'அமிர்தநீர்' என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும்- செல்வப்பெருந்தகை
- ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
- மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? என தமிழிசை கேள்வி
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய காமகோடி, "பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை , "மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட மருந்தாக மாட்டு சிறுநீரை குடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிகிறார்கள்.
மாட்டின் சிறுநீருக்கு அமிர்த நீர் என்று பெயர். அப்படி என்றால் உயிருக்கான நீர் என்று பொருள். நான் ஒரு அலோபதி டாக்டர். ஒரு அல்லோபதி டாக்டர் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றால் நான் பேசியிருக்க மாட்டேன்.
ஆயுர்வேதத்தில் மாட்டின் சிறுநீரை 'அமிர்தநீர்' என்று சொல்கிறார்கள். இதை சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கோமியம் குறித்து டாக்டர் தமிழிசை பேசியதை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.
இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.