என் மலர்
தமிழ்நாடு
6,442 பாம்புகளை ஆறு மாதத்தில் பிடித்த இருளர்கள்- விஷம் எடுக்கும் பணி தீவிரம்
- வடநெம்மேலியில் உள்ள பாம்பு பண்ணையை சுற்றுலா பயணிகள் பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
- பொங்கல் தொடர் விடுமுறையில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணை வளாகத்தில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த சங்கத்தில் செங்கல்பட்டு, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இருளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட கொடிய விஷமுடைய பாம்புகளை பிடித்து சங்கத்தில் ஒப்படைப்பது வழக்கம்.
இந்த பாம்புகளை மண்பானையில் அடைத்து வைத்து, பாதுகாத்து அதில் இருந்து விஷம் எடுக்கப்படுகிறது. வடநெம்மேலியில் உள்ள பாம்பு பண்ணையை சுற்றுலா பயணிகள் பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். பொங்கல் தொடர் விடுமுறையில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்த ஆண்டு 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களில் 1130 கட்டுவிரியன், 5043 சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் 149, நல்ல பாம்பு 120 என மொத்தம் 6 ஆயிரத்து 442 பாம்புகள் பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாம்புகளிடம் விஷம் எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது குளிர் காலம் என்பதால் குளிரை தாக்கு பிடிக்க பாம்புகள் உள்ள பானைகளை சுற்றி வைக்கோல் வைத்து பாம்புகளுக்கு சூடு ஏற்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.