என் மலர்
தமிழ்நாடு
கவர்னருக்கு எதிரான வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
- மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
- மசோதாக்களை 2,3 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடுவதே வாடிக்கையாக உள்ளது என்று வாதாடினார்.
புதுடெல்லி:
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்து உள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக கவர்னர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2023-ல் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது ஏன்? என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. அரசு-கவர்னர் மோதலால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் திரிவேதி வாதாடும்போது கூறியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது. அரசு அமைக்கும் தேடல் குழுவை கவர்னர் ஏற்க மறுக்கிறார். தனக்கு தான் நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது என செயல்படுகிறார்.
இது கல்வி நிலையங்களின் செயல்பாட்டை பாதிக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
மத்திய அரசின் ஏஜென்டாக கவர்னர்கள் செயல்படக் கூடாது. அரசியலமைப்பு சட்டங்களின் விளக்கங்களை திரித்து கவர்னருக்கு தான் அரசியலமைப்பின் அனைத்து அதிகாரங்கள் உள்ளன என தவறான தகவல் வழங்கக் கூடாது. அவ்வாறு கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினால், அது கூட்டாட்சியின் முடிவு ஆகும். தமிழகத்தில் கவர்னர் என்பவர் தன் விருப்பம் போல் செயல்படுகிறார். மசோதாக்களை 2,3 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடுவதே வாடிக்கையாக உள்ளது என்று வாதாடினார்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-
மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக விடை காண வேண்டும்.
மசோதா மாநில அரசால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் போது அதில் கவர்னர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் அதன் மீது ஜனாதிபதி என்ன மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்?
நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை" என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்? மசோதாவுக்கு தான் ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் வரை, அவர் ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா? மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கவர்னர் கூறும்போது, எந்த காரணத்துக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறுகிறாரா? இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது, எந்த அடிப்படையில் கவர்னர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார்? அனைத்து மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருக்கும் போது கவர்னர் 2 மசோதாக்களை மட்டும் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? என நாளை காலை விளக்கம் தர கவர்னருக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.