search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி கடலில் படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு, திருவள்ளுவரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திருவள்ளுவர் சிலை அருகே Statue of wisdom தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.

    பின்னர் அனைவரும், கண்ணாடி இழை பாலத்தின் மீது நடந்து சென்றனர்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×