என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பொது மக்கள் உற்சாக வரவேற்பு நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பொது மக்கள் உற்சாக வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/8999113-newproject24.webp)
நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பொது மக்கள் உற்சாக வரவேற்பு
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- மகாத்மா காந்தி தினசரி சந்தை, வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்து, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அரசினர் சுற்றுலா மாளிகை செல்கிறார்.
பின்னர் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
அவர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் ரூ.11.03 கோடி மதிப்பீட்டிலான மேம்படுத்தப்பட்ட பணி களையும் திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே நேருஜி கலையரங்கில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர செயலாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வட்ட செயலாளர்கள் என மொத்தம் 155 நிர்வாகிகளை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அப்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்த லில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
கலந்துரையாடலின்போது நிர்வாகிகளின் கருத்துகளையும் அவர் கேட்கிறார். இதில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை தி.மு.க. தலைமையில் இருந்து வழங்கப்பட்டு விட்டது.
இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் நேருஜி கலையரங்கம் அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைகின்றனர்.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை சுற்றுலா மாளிகையில் வைத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காலை 9.30 மணி அளவில் புறப்பட்டு பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக ரூ.78 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6 மாடி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமான ரூ.1,060 கோடியில் முடிவுற்றுள்ள தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் விழா மேடையில் எழுச்சியுரை ஆற்றும் அவர், 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
2 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப் பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் போது வழி நெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி, விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு-ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தப் பட்டுள்ளது. மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடை களும் அமைக்கப்பட்டுள்ளது.