search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாடு முட்டியதில் மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி படுகாயம்- வீடியோ
    X

    மொபட்டில் சென்ற மாணவி மீது மாடு முட்டிய காட்சி

    மாடு முட்டியதில் மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி படுகாயம்- வீடியோ

    • தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
    • ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகள் இருக்கின்றன.

    இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மாநகர பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகள் பரபரப்பாகவே இயங்கும்.

    இந்த நிலையில் ஆங்காங்கே நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை வாகனங்களில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி விட்டது.

    சாலைகளில் திரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும், வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகித்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அவ்வப்போது சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி இருந்தது. அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநகரில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தொடர்கதையாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×