search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
    X

    பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு

    • பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
    • 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பக்தர்களின் நலனுக்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் கூறியதாவது:-

    தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடிவாரம், பஸ் நிலையம், கிரிவீதிகளில் 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்ற தடுப்பு போலீஸ் குழு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே அதையொட்டிய 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பஸ்நிலையம், கோவிலுக்கு செல்லும் வழி, வாகன நிறுத்தம் தெரிந்து கொள்வதற்காக 300 வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 300 கேமராக்கள் பொருத்தும் பணியும் நடக்கிறது. ஓரிரு நாட்களில் அவை செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழிப்பாதை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு சென்று பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×