search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திறந்தவெளி கிணற்றால் மாசடைந்த குடிநீர்- நோய் தொற்று அச்சத்தில் மக்கள் பீதி
    X

    திறந்தவெளி கிணற்றால் மாசடைந்த குடிநீர்- நோய் தொற்று அச்சத்தில் மக்கள் பீதி

    • மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் ஏரிக்கரை தெரு, செல்வ விநாயகர் தெரு, திருக்கழுக்குன்றம் சாலை, முதல் குறுக்கு தெரு, 2வது மற்றும் 3வது குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதிக்கு ஏரிக்கரை தெருவை ஒட்டியுள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வடகடம்பாடி ஊராட்சி நிர்வாகம் தடையின்றி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஏரிக்கரை தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கலங்கிய நீருடன், கருப்பு துருக்கள் கலந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 'ஃபெஞ்ஜல்' புயல் கனமழைக்கு பிறகு இது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த, குடிநீரை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனால், அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் அங்கு உள்ள தரைமட்ட கிணறு மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் கிடப்பதால் தூசிகளும், சிற்பப்பட்டறை துகள்களும் கிணற்று நீரில் கலப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாசடைந்த குடி நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் போது தொண்டை மற்றும் உடலில் அரிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் குடிநீர் மாசு ஏற்படுத்தும் இந்த கிணற்றை மூடி பாதுகாத்து, நீர்தேக்க தொட்டியையும் சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

    தொடர்ந்து இப்படி மாசடைந்த குடிநீரை குடிப்பதால் இப்பகுதி முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி, தொண்டை தொற்று, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலை தொடர்ந்தால் அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தண்ணீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க உள்ளோம், தற்போது பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் பலியாகி 60 பேர் பாதிக்கப்பட்ட சம்பவத்தால் இன்னும் கூடுதல் பயமாக உள்ளது என்றனர்.

    Next Story
    ×