என் மலர்
தமிழ்நாடு
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொட்டிய கனமழை- ஏரிகள் நிரம்பி வழிந்ததால் 22 கிராமங்கள் துண்டிப்பு
- ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது.
- சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி வழிந்ததால் சுமார் 22 கிராமங்கள் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து ஊத்தங்கரையில் 50 செ.மீ அளவு மழை பொழிந்தது.
இதன் காரணமாக ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. அதில் ஒரு ஏரியான பரசன ஏரி நிரம்பி அதன் உபரி நீர் ஊத்தங்கரை நகர பகுதி, பஸ் நிலையம், திருப்பத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளம் நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பேரூராட்சி திருமண மண்டபம், தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் 2-வது நாளாக இன்றும் மழை அவ்வப்போது பெய்து வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, நிவாரண உதவி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 111 ஏரிகள் நிரம்பி உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அங்குள்ள தரைபாலங்கள் மூழ்கியது. இதனால் கீழ்குப்பம், காட்டேரி, அனுமன்தீர்த்தம், காரப்பட்டு, கல்லாவி, சாமல்பட்டி உள்ளிட்ட 22 கிராமங்கள் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டது.
மேலும், அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது. மேலும், ஊத்தங்கரை பகுதியில் இன்றும் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அண்ணா நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.
ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று போச்சம்பள்ளியில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறிதால், பஸ் நிலையம், போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனம், ஆடுகள், கோழிகள் அடித்து செல்லப்பட்டன.
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி கரையோர வசிக்கும் பொதுமக்களையும் பேரிடர் மீட்பு பணி குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அரூரில், திரு.வி.க. நகர் மேற்கு, தில்லை நகர், மேல்பாட்சாபேட்டை, அம்பேத்கர் நகர் புது காலனி, ஆத்தோர வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அவதியடைந்தனர்.
அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த தொடர்மழையால், சங்கிலிவாடி ஏரி, கோணம்பட்டி ஏரி மற்றும் எல்லப்புடையாம்பட்டி, செல்லம்பட்டி, லிங்காபுரம், பெரமாண்டப்பட்டி, மாம்பட்டி, கணபதிப்பட்டி ஏரிகள் நிரம்பின. அரூரில் 90 சதவீதத்திற்கு மேலான ஏரிகள் நிரம்பின.
அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
தடுப்பணைகள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் விளை நிலங்களில் புகுந்தும், தேங்கியும் உள்ளது. மேலும், சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் மற்றும் திருப்பாறை நீரில் மூழ்கியுள்ளது.
இதேபோன்று அரூரை அடுத்த சித்தேரி மலைப்பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது.
அப்போது, வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சித்தேரி மலை கிராம பகுதி முழுவதும் செல்வதற்கு வழியில்லாமல் துண்டிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் உடனே அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருக்கம்பட்டி, கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பீன்ஸ், மஞ்சள், நெல், கொள்ளு உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு காத்திருந்த நேரத்தில், தொடர் மழை காரணமாக 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த எல்லா பயிர்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், விவசாய நிலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதேபோன்று வாச்சாத்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர் வெளியேற வழியின்றி உபரிநீர் வெளியேறும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வார்சாத்தி, கூக்கடப்பட்டி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.
வத்தல் மலையில் பெய்த கனமழையால், நேற்று அதிகாலை முதல், காட்டாற்று வெள்ளம் உருவாகி, நீரோடைகள் வழியாக மலை அடிவாரத்திலுள்ள தடுப்பணைகளில் சீறி பாய்ந்தது. இதில், வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலை துண்டிப்பால், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
இதனால், வத்தல் மலையிலுள்ள, 10 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அங்கிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில், தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், லோகநாதன் ஆகியோர் தலைமையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டனர். இதனால் பாலம் அமைத்து போக்குவரத்து சீரானது.
இதேபோன்று பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் ஊர் ஏரி கனமழை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பையர் நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடையுடன் கலந்த மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதே போல பொம்மிடி அருகே உள்ள கோட்டை மேடு என்ற இடத்தில் வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் ஆங்காங்கே அடைப்பை ஏற்படுத்தி வயல்வெளிக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
கோட்டைமேடு தரைப்பாலம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டு ஆற்று வெள்ளம் அடித்து செல்லப்பட்டதால், துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட எல்லையில் உள்ள கிராம மக்கள் போக்குவரத்து வழியில்லாமல் அவதிக்குள்ளாகினர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள 8-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி சேதமானது.