என் மலர்
தமிழ்நாடு

கோவை அருகே மனைவியை சுட்டு கொன்று விட்டு கணவர் தற்கொலை

- கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார்.
- கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.
சூலூர்:
கோவை அருகே உள்ள சூலூர் பட்டணம் புதூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு அந்த பணியை விட்டு சொந்த ஊரில் வந்து குடியேறினார். இங்கு அவருக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயத்தொழிலில் ஈடுபட்டு இருந்தார்.
சமீபகாலமாக கிருஷ்ணகுமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சங்கீதாவை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சங்கீதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதன்பிறகு கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார். பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியில் கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அங்கு அவர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை கிருஷ்ணகுமார் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அங்கு சங்கீதா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது மனைவியை சுட்டுக் கொன்ற கிருஷ்ணகுமார் கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட விவரமும் தெரியவந்தது.
இதையடுத்து சங்கீதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அவர் தோட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்து இருந்தது தெரியவந்தது. ஆத்திரத்தில் அந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
சுட்டுக் கொல்லும் அளவுக்கு கணவன்-மனைவி இடையே என்ன பிரச்சனை இருந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளும் வீடு திரும்பியதும் பெற்றோரை எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் கண்ணீர் வடித்தபடி கலங்கி நின்றனர்.
இந்த சம்பவம் சூலூர் பட்டணம் பகுதியில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.