என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழ்நாடு கழிவுகளின் தேசமா? - அரசு கவனம் செலுத்துமா? கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழ்நாடு கழிவுகளின் தேசமா? - அரசு கவனம் செலுத்துமா?](https://media.maalaimalar.com/h-upload/2024/12/17/7223692-klwasteintnstate.webp)
கேரளா 'கடவுளின்' தேசம் என்றால், தமிழ்நாடு 'கழிவுகளின்' தேசமா? - அரசு கவனம் செலுத்துமா?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
- விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.
கடவுளின் தேசமாக கூறப்படும் கேரளா மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் காலங்காலமாக மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் மலைப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் விவகாரங்களில் கேரள அரசு அதிகாரிகளும் மிகக் கடுமையாக பின்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்றில்லாமல், கேரளாவில் லஞ்சப் புழக்கம் மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் காசு கொடுத்தாலும் விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழவுகள் அதன் அண்டை மாநிலங்களாக இருக்கும் தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் பலமுறை இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தும், புகார்களை தெரிவித்தும் இதுநாள் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
கேரளா போன்றில்லாமல் தமிழ் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் இதுபோன்ற வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கலாம் என்ற நிலையை, கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிரமாங்களில் கேரள கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக அறப்போர் இயக்கமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவுகளில் தமிழகத்தில் கொட்டப்பட்டு வரும் கேரள கழிவுகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. பலரும் இதனை அதிகம் பகிரத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவல்துறை, சுங்கச் சாவடி அதிகாரிகள் அனுமதியின்றி தமிழ்நாடு எல்லைக்குள் கேரள கனரக வாகனங்கள் வரமுடியாது. அதையும் மீறி வாகனங்கள் வருகின்றன, கழிவுகள் கொட்டப்படுகின்றன என்றால் தமிழ்நாடு அதிகாரிகள் உதவியின்றி இது நடைபெற வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. வாகனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை அனுமதிப்பதால்தான் தமிழ்நாட்டில் கேரளா கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளா பதிவெண் கொண்ட கனரக வாகனங்களால் தமிழகம் வரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் தென் மாவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இது தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது செவி சாய்ப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்..!