என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பணிமனையில் நிறுத்த இருந்த மாநகர பஸ்சை தாறுமாறாக ஓட்டிச்சென்ற போதை வாலிபர்
- முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது.
- கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூரில் மாநகர பஸ் பணிமனை உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, கிளாம்பாக்கம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரவு கடைசி பஸ்சேவை முடிந்ததும் பணிமனையில் மாநரக பஸ்களை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் போதை வாலிபர் ஒருவர் திடீரென பணிமனைக்குள் புகுந்தார்.
இதனை அங்கிருந்த ஊழியர்கள் கவனிக்க வில்லை. திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மாநகர பஸ்சில் ஏறி வண்டியை வெளியே ஓட்டிச்சென்றார்.
வழக்கமான டிரைவர் தான் பஸ்சை ஓட்டிச் செல்வதாக நினைத்து ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து போதை வாலிபர் மாநகர பஸ்சை தாறுமாறாக சோழிங்கநல்லூர் அருகே அக்கரை, கிழக்குகடற்கரை சாலையில் வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது. இதையடுத்து லாரிடிரைவர் கீழே இறங்கி வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்தது பெசன்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம்(33) என்பது தெரிந்தது. கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பழிவாங்க மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
நேற்று காலை ஆபிரகாம் திருவான்மியூர்-ஊரப்பாக்கம் இடையே மாநகர பஸ்சில் பயணம் செய்து உள்ளார். அப்போது அதில் இருந்த கண்டக்டருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை பழிவாங்க ஆபிரகாம் திருவான்மியூர் பணிமனையில் நிறுத்தி இருந்த மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் ஆபிரகாம் பஸ்சை ஓட்டி வந்து உள்ளார். அதிகாலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் இல்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாநகர பஸ் விபத்தில் சிக்காமல் இருந்து இருந்தால் அந்த பஸ்சை ஓட்டிச் சென்றது யார் என்பதே தெரியாமல் இருந்து இருக்கும்.
இது தொடர்பாக கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் இல்லாத ஒருவர் பணிமனையில் இருந்து மாநகர பஸ்சை ஓட்டிச்சென்றதை அங்கிருந்து ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது எப்படி? என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.






