என் மலர்
தமிழ்நாடு
நாளை காணும் பொங்கல்- பழவேற்காடு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
- பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது.
பொன்னேரி:
காணும் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள், கடற்கரைக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சமைத்து கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நாளை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரையில் திரளானோர் குவிவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் பழவேற்காடு கடற்கரையிலும் ஏராளமானோர் நாளை காலை முதல் மாலை வரை குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் அங்குள்ள டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவைகளை பார்த்து ரசிப்பார்கள்.
இதையொட்டி பழவேற்காடு பகுதியில் உதவி ஆணையாளர் வீரக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ், குணசேகரன், சாம் வில்சன், வேலுமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்கி உள்ளனர்.
பழவேற்காடு கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து உள்ளனர். அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளோடு வருபவர்கள் பத்திரமாக குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகை, பணம் மற்றும் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சாலைகளில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, வனத்துறையினர் 5 பேர் கடற்கரையில் ரோந்து செல்வார்கள். வழிமாறி ஊருக்குள் சென்று கடற்கரைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். பழவேற்காடு தன்னார்வலர்கள் மூலமாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, படகில் ரோந்து செல்லப்படும். கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது என்றனர்.