search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குளம்போல் காட்சியளித்த குமரி கடல் - சுனாமி பீதியில் சுற்றுலாப் பயணிகள்
    X

    குளம்போல் காட்சியளித்த குமரி கடல் - சுனாமி பீதியில் சுற்றுலாப் பயணிகள்

    • கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்கு பிறகு கடல் அடிக்கடி உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, கடல் சீற்றம், கொந்தளிப்பு, நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பது என்பன போன்ற பல்வேறு இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பெங்கல் புயல் உருவான சூழ்நிலையில் 29-ந்தேதி வரை கடலில் பலத்த மழையுடன் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது. இடையிடையே சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்த சூழலில இன்று கன்னியாகுமரி கடல் அலை இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சியளிக்கிறது. கரையில் மட்டும் லேசாக அலை அடித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடல் இது போன்று அமைதியாக குளம் போல் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதும் அதே நிலை காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஆனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கு போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×